உஷா உதூப் மாதிரி இல்ல… (சிறுகதை)

ஒரு அழகான குளத்தில், ஒரு தவளை வசித்தது. அது தன் குரலை மிகவும் கவர்ச்சியான குரல் என்று மற்ற தவளைகளிடம் பெருமை பேசிக் கொண்டது.
”என் குரல் போல் யாருக்கு வரும். நான் வாயைத் திறந்து பாடினேன் என்றால், மாலதி, மால்குடி சுபா, உஷா உதூப் எல்லாம் பிச்சை வாங்கணும். அவர்களைப் போன்ற குரல் வளம்தான் எனக்கு. உங்கள் குரலையெல்லாம் கேட்டால் அக்கம் பக்கத்தில் உள்ள விலங்குகள் எல்லாம் காத தூரம் ஓடி விடும்!” என்று கூறி மமதையுடன் சிரித்தது.
”அய்யோ… இவன் பெருமைக்கு எல்லையே இல்லையா?”
அந்தத் தவளையை மற்ற தவளைகளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. காரணம்… தலைக்கனம் தான்.
”இவனது தலைக்கனத்திற்கு என்றாவது ஒருநாள் சரியான பாடம் கிடைக்கத்தான் போகிறது!” என்று சொல்லி ஒதுங்கியே வசித்தன மற்ற தவளைகள்.
ஒரு நாள் —
தலைக்கனம் பிடித்த அந்தத் தவளைக்கு பாட ஆசை வந்தது. உடனே, அது நீரை விட்டுக் கரைக்கு வந்தது.
”இப்போது நான் பாடப் போகிறேன். என் குரலின் இனிமை என்னையே மயங்க வைக்கப் போகிறது!” என்று நினைத்தபடி வாயைத் திறந்து கத்த ஆரம்பித்தது.
மற்ற தவளைகள் நீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தன.
”கத்த ஆரம்பித்து விட்டான். இனி மாலை வரை வாயை மூட மாட்டான். இந்தத் தலைக்கனம் பிடித்தவனுக்கு எப்பொழுது தான் பாடம் கிடைக்கப் போகிறதோ!” என்று அவை முணுமுணுத்தன.
கத்த ஆரம்பித்த தவளை, தனது குரல் இனிமையைக் கேட்க எந்த விலங்காவது வருகிறதா என்று அவ்வப்போது தன் கண்களை ஸ்டைலாக சுழற்றிப் பார்த்துக் கொண்டது. நேரம் ஆக ஆக அதன் சுதி கூடியது.
அதே சமயம் —
அந்தக் குளத்தின் சிறிது தூரத்திற்கு அப்பால் உள்ள மரத்தின் அடியில், உண்ட களைப்பால் ஓய்வெடுக்க நினைத்து ஒரு சிங்கம் வந்து படுத்தது.
அதற்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. மெல்ல அது இமைகளை மூடியபோது, கொரக், கொரக்… என்ற சப்தம் அதன் காதில் விழுந்தது. இடைவிடாது வந்த அந்த சப்தம் சிங்கத்தின் தூக்கத்தைக் கெடுத்தது.
சிங்கத்திற்கு ஒரே எரிச்சல். அதே சமயம், அந்த சப்தம் இதுவரை கேட்டிராத சப்தமாக இருப்பதால், தன்னை விட பலம் பொருந்திய ஏதோ ஒரு விலங்கின் சப்தமாக அது இருக்குமோ என்று நினைத்து பயந்தது.
மனதில் பயம் வந்தால் அதன் பிறகு உறக்கம் வருமா? சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது. ”இதென்ன சப்தம்? யார் கத்துவது? எங்கிருந்து வருகிறது?” என்று நினைத்து ஊன்றிக் கேட்டது. அந்த சப்தம் வந்த திசையை அறிந்து மெல்ல பூனை போல அடிகள் வைத்து அங்கு சென்றது.
அங்கே ஒரு குளம் இருப்பதைப் பார்த்தது. அதோடு கரையில் நின்று கொண்டு ஒரு பெரிய தவளை கடூரமாகக் கத்திக் கொண்டிருப்பதையும் பார்த்தது.
அடச்சே! சிறிது நேரத்தில் கதிகலங்கச் செய்தது… கேவலம் இந்த தவளையா? என்று நினைத்த சிங்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. அது தவளையை முறைத்துப் பார்த்தது.
தன் குரல் இனிமையில் கவரப்பட்டு ஒரு சிங்கம் மிகவும் அமைதியுடன் வந்து நிற்பதாக அந்தத் தவளை நினைத்துக் கொண்டு குளத்தில் இருந்த மற்ற தவளைகளைப் பார்த்து, ”பார்த்தீர்களா அங்கே! என் குரலின் இனிமையை கேட்டு காட்டின் அரசனான சிங்க ராஜாவே வந்திருக்கிறார். எங்கே ஆர்ப்பாட்டமாக வந்தால் என் பாடல் தடைப்படுமோ என்று நினைத்து சிறிதும் ஓசையின்றி வந்து நின்று, அமைதியுடன் கேட்டு ரசிக்கிறார் பாருங்கள். இப்பொழுதாவது என் குரலின் மகிமையை உணர்ந்து கொண்டீர்களா?” என்று கூறிவிட்டு மறுபடியும் கத்த ஆரம்பித்தது.
”ஓஹோ! திமிர் பிடித்த தவளையா, நீ? உன் குரலின் இனிமை கேட்டா நான் வந்தேன். என் தூக்கத்தைக் கெடுத்த உன்னை என்ன செய்கிறேன் பார்!” என்று முணுமுணுத்தபடி கத்திக் கொண்டிருந்த தவளையின் மேல் பாய்ந்தது.
தனது முன் காலைத் தூக்கி ஒரே அடி. என்ன, ஏது என்று உணர்வதற்குள் அந்த தவளை நசுங்கி உயிர்விட்டது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற தவளைகள், ”தலைக்கனம் பிடித்தவனுக்குச் சரியான பாடம் கிடைத்துவிட்டது!” என்று எண்ணி நீரூக்கடியில் மூழ்கி மறைந்தன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s