பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப்பாதை! -தினமலர்

பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாற்றுப்பாதை திட்டம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி – கோவை வழித்தடத்தில், பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இடைவெளியின்றி தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன. உயர்கல்வி, மருத்துவ தேவைக்கும், தொழில்ரீதியாகவும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு, இருசக்கர வாகனங்கள், கார் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

பஸ் பயணிகள் கூட்டமும் அதிகரித்துள்ளதால், பஸ் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்து அதிகரித்தாலும், ரோட்டை விரிவுபடுத்தி, தரத்தை மேம்படுத்தாததால் விபத்துகளும், உயிரிழப்பும் அதிரித்து வருகிறது.

நான்குவழிச்சாலை

இந்நிலையில், பொள்ளாச்சி – கோவை வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் துவங்கியுள்ளது. மொத்தம், 26 கி.மீ., தொலைவுக்கு, 1.2 மீ., அகலத்தில் மையத்தடுப்பும், ரோட்டின் இரு பக்கமும் தலா, 9 மீ., அகலத்தில் கான்கிரீட் ரோடும் அமைக்கப்படுகிறது.

வழித்தடத்தில், 15 இடங்களில் சிறிய பாலங்கள் அமைகிறது.

முள்ளுப்பாடியில் ரயில்வே மேம்பாலம், கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபத்தில் உயர்

மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்பணிகள், 500.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. ரோட்டில், பல இடங்களில் ரோடு முழுமையாக தோண்டப்பட்டுள்ளது.

மேடான பகுதிகள் பள்ளமாகவும், பள்ளமான பகுதிகள் மண் கொட்டப்பட்டு மேடாகவும் மாற்றப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், கோவை ரோட்டில் பயணிப்பது ஆபத்தான பயணமாக உள்ளது.

மாற்றுப்பாதை

கோவைக்கு வேறு மாற்றுப்பாதை வசதி இல்லாததால், பணிகள் நடக்கும் நிலையில் போக்குவரத்தும் அதே ரோட்டில் இயக்கப்படுகிறது. ரோடு முழுவதும் புகை மண்டலமாக மாறி விடுகிறது. பணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி – கோவை வழித்தடத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாற்று வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாற்று வழித்தட பாதை, தற்போதுள்ள ரோட்டின் நிலை, மேம்படுத்த வேண்டிய பகுதிகள், அதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் கவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவசர அவசியம் கருதியும், கோவை ரோட்டில் நிலவும் நெருக்கடியை கருத்தில் கொண்டும், இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

திட்ட மதிப்பீடு ரூ. 32 கோடி!

மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

திட்டமிடப்பட்டுள்ள மாற்றுப்பாதை பொள்ளாச்சி அடுத்துள்ள கோவில்பாளையத்தில் துவங்குகிறது. கோவில்பாளையம், காளியண்ணன்புதுார், குளத்துப்பாளையம், முள்ளுப்பாடி, பட்டணம், நல்லட்டிபாளையம், கோடங்கிபாளையம், கோதவாடி, கொண்டம்பட்டி, அரசம்பாளையம், மயிலேறிபாளையம் வழியாக செட்டிபாளையத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

வழித்தடத்தில், முள்ளுப்பாடி – காளியண்ணன்புதுார் ரோடு, வலசுபாளையம் – குளத்துபாளையம் ரோடு முதல் முள்ளுப்பாடி – நெகமம் ரோடு வரை, முள்ளுப்பாடி நெகமம் ரோடு – பட்டணம், நல்லடிபாளையம் – பட்டணம் ரோடு, அரசம்பாளையம் – கொண்டம்பட்டி ரோடு, அரசம்பாளையம் – மயிலேறிபாளையம் ரோடு, என, 11.3 கி.மீ.,க்கு யூனியன் ரோடு உள்ளது. மற்ற இடங்களில், நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது.

இத்திட்டத்துக்கு, யூனியன் ரோடுகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். விரிவான திட்ட அறிக்கைக்கு ஏற்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்ததும், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கலாம்.

ரோடு விரிவாக்கத்துக்கு, இடவசதி உள்ளதால், நிலம் எடுப்பு செய்ய வேண்டியதில்லை. பணிகளை துவங்கினால், மூன்று மாதத்தில் நிறைவு செய்யலாம். மொத்தம், 23.7 கி.மீ., தொலைவுக்கு ரோடு விரிவுபடுத்த வேண்டும். அனைத்து ரோடுகளும், 3.75 மீ., உள்ளது; 7 மீ.,க்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகள் அனைத்தும் மேம்படுத்த வேண்டும். இத்திட்டத்துக்கு, 32 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட்

தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக செட்டிபாளையத்துக்கு, 30.8 கி.மீ., தொலைவு செல்ல வேண்டும். மாற்றுப்பாதையில் சென்றால், பொள்ளாச்சி – கோவில்பாளையம் – செட்டிபாளையத்துக்கு, 33.7 கி.மீ., தொலைவு. இதில், 23.7 கி.மீ., தொலைவுக்கு மேம்படுத்த வேண்டும்.

செட்டிபாளையத்தில் இருந்து, வெள்ளலுாரில் கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டுடன் இத்திட்டச்சாலை இணைக்கப்படுகிறது. மேலும், செட்டிபாளையத்தில் இருந்து, ஈச்சனாரி, போத்தனுார், குறிச்சி பகுதிக்கு எளிதாக செல்லலாம்.

செட்டிபாளையம் – நஞ்சுண்டாபுரம் வழியாகவும், செட்டிபாளையம் – சிங்காநல்லுார் வழியாகவும் திருச்சி ரோட்டை அடையலாம். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், கோவை ரோட்டிற்கு மாற்றுப்பாதையாக இருக்கும். கோவை ரோட்டின் கிழக்கு பகுதியிலுள்ள கிராமங்களுக்கு முக்கிய இணைப்பு பாதையாகவும் இருக்கும்.

தின மலர்
24.04.2017

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s